வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணெய்க் கடையொன்றை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்திஜி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்திஜியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார்.
வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.
கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.
கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கேயும் அவர் வசதியற்றவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். 1927-ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். சேலத்தில் நடந்த மூன்றாவது கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கட்சி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆனால் சேலம் மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் ஒதுங்கியே இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவர் கடைசி வரை திலகரின் சீடராகவே இருந்தார். கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.
1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.
வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை
மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.
மெய்யறிவு-1915
வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் போது மற்ற கைதிகளுக்கு நீதி, நெறிகளை விளக்குவார். அக்கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்கும் என்று வ.உ.சி. யிடம் கூறினார்கள். அவ்வாறு இயற்றப்பட்ட செய்யுள்களே மெய்யறிவு என்ற நூலாகும். அது 10 அதிகாரங்கள் உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுள்கள் உடையது. ஒவ்வொருசெய்யுளும் 4 வரிகள் உடையது. இந்த நூலில் வ.உ.சி தன்னை அறிந்து கொள்வது எப்படி, நம் விதியைத் தீர்மானிப்பது எவ்வாறு, ஆரோக்கியத்தைப் பேணும் முறைகள், மனதை ஆளுவது எங்ஙனம், நம் மனத்தில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது எப்படி, உண்மை நிலையை என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார்.
பாடல் திரட்டு-1915
இந்நூல் பல சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இது அவரது தலை சிறந்த படைப்பாகும்.
சுயசரிதை-1946
இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆஷ் கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.
உரை எழுதிய நூல்கள்தொகு
வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம்,
திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார்.
இன்னிலை-1917
வ.உ.சி. ரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்த நூலைப் படிக்கும் போது அவரது இலக்கணப் புலமையை நாம் அறிந்து கொள்ளலாம்.
சிவஞான போதம்-1935
சிவஞான போதம் ஒரு பக்தி நூலாகும். வ.உ.சி. இந்நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்ததில் தத்துவம் மற்றும் பக்தியில் சிறந்தவர் ஆனார். மத வேற்றுமை காண்பவர்கள் "யான், எனது" என்னும் மத வெறி பிடித்தவர்களென்றும் நாடு இருக்கும் ஒற்றுமையற்ற நிலையில் மதவேற்றுமை காண்பது நாட்டு ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்றும் வ.உ.சி. இந்நூலில் கூறுகிறார். அவர் இந்நூலில் மதங்களின் பொய்யான உயர்வு, தாழ்வு குறித்து ஒன்றும் எழுதவில்லை.
திருக்குறள்-1935
பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றின் மீது வ.உ.சி.க்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரது உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. அவர் பொருள் கூறும் விதம், பல் வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் இவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என நாம் அறியலாம்.
வ.உ.சி. யால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்
- 1.திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்)-1917
- 2.தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)-1928
கட்டுரைகள்தொகு
வ.உ.சி பல்வேறு விஷயங்களைப் பற்றி வெவ்வேறு பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். வ.உ.சி. எழுதிய நூல்கள் பல போதிய நிதி வசதி இல்லாததால் பதிப்பிக்கபடவில்லை. ஆனால் இப்பொழுது அக்கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. அவை காணாமல் போய்விட்டன. அவற்றுள் சில நமக்குக் கிடைத்துள்ளன.
- கடவுளும் பக்தியும்
- கடவுள் ஒருவரே
- மனிதனும் அறிவும்
- மனமும் உடம்பும்
- வினையும் விதியும்
- விதி அல்லது ஊழ்
வ.உ.சி.யின் அரசியல் சொற்பொழிவு
வ.உ.சி.தலை சிறந்த மேடைப் பேச்சாளர்.சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரஸ் மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.
பத்திரிக்கை ஆசிரியராக வ.உ.சி.
வ.உ.சி. விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
மொழி பெயர்ப்பாளராக வ.உ.சி.தொகு
வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைச் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.கூறுகிறார். வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.
மனம் போல் வாழ்வு-1909
ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை வ.உ.சி. "மனம் போல் வாழ்வு" என்று மொழி பெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615.
அகமே புறம்- 1914
ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை வ.உ.சி. "அகமே புறம்" என்று மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 602.
வலிமைக்கு மார்க்கம்- 1916
ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" ஆகும். அதனை வ.உ.சி. "வலிமைக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615; பக்க எண் 652-653.
சாந்திக்கு மார்க்கம்- 1934
ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" ஆகும். அதனை வ.உ.சி. "சாந்திக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள் தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 715; 740; 760; 766.
சான்றிதழ்தொகு
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் எழுதிய பாடல்
- ஒழுக்கத்தின் உரவோய் நாட்டின்
- உரிமைப்போர் நடந்த காலை
- எழுச்சியின் தலைமை ஏற்றே
- இணையிலாத் தியாகம் செய்தோய்
- மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்
- முற்றிலும் ஒன்றி நிற்க
- விழிப் பொறி இரண்டும் போல
- விழுப்பமாய்க் கொண்டாய் அய்யா
- பாரதி பெற்ற நண்ப
- பழியிலா வீர வாழ்க்கை
- பாரெல்லாம் ஏத்தும் வண்ணம்
- பண்புடன் நடத்தி நின்றோய்
- வேருடன் நைந்து வாடி
- வெள்ளையர் ஆட்சி வீழ
- நேரிலாப் போர்கள் செய் தாய்
- நித்தமும் நின் பேர் வாழி"
சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார்.
பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி
கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
- கப்பலோட்டிய தமிழன் [1944]
- தளபதி சிதம்பரனார் [1950]
- கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
வ.உ.சி சிலைஅமைத்தல்தொகு
1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான நினைவுச் சின்னங்கள்.தொகு
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.(1939)
- திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
- சென்னை மெரீனா கடற்கரை.
- தூத்துக்குடி துறைமுகம்.(முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.)
- மதுரை சிம்மக்கல் (முன்னாள் முதல் அமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
- திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம். (முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
இன்னும் பல இடங்களில் வ.உ.சி. சிலைகள் உள்ளன. தெருக்கள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நினைவு இல்லங்கள்தொகு
- ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம்.[7]
- திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்.
அஞ்சல் தலைதொகு
வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி.
இந்திரா காந்தி அம்மையாரால் 5 செப்டம்பர் 1972 அன்று வெளியிடப்பட்டது.
[8]
திரைப்படம்தொகு
வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு
கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.
துறைமுகம்தொகு
தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.